தமிழகத்தில் முதலீடு செய்ய முற்பட்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் எதனால் தமிழகத்தை விட்டுவிட்டு கர்நாடகாவில் முதலீடு செய்கிறது என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிதாக தொழில் தொடங்க வருபவர்களிடம் 30 சதவீத கமிஷன் வசூலிக்க முயற்சிப்பதால் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்வதை தவிர்ப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 1600 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக முதலமைச்சர் அறிவித்த சில மணி நேரத்தில், அதை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடகாவில் 4963 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக வெளியான செய்திகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் செய்ய இருப்பதாக சொன்ன முதலீடு தான் கர்நாடகத்துக்கு கைமாறி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, தமிழகத்தில் 1600 கோடி முதலீடு செய்ய இருப்பதாக கூறி இருந்த நிலையில், அதை விட 3 மடங்கு அதிகமாக கர்நாடகாவில் முதலீடு செய்ய காரணம் என்ன என்றும் வினவியுள்ளார்.