கிருஷ்ணகிரியில் 9 பேரை பலிகொண்ட பட்டாசு கிடங்கு விபத்துக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது காரணம் அல்ல என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் அமளிக்கு நடுவே கிருஷ்ணகிரி விபத்துக்கான காரணம் பற்றி அ.தி.மு.க. உறுப்பினர் எம். தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
அதற்கு விளக்கமளித்த பெட்ரோலிய அமைச்சர், விபத்து நடந்த குறிப்பிட்ட உணவகத்துக்கு எந்த நிறுவனமும் சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகிக்கவில்லை என்று தெரிவித்தார். பட்டாசுக் கிடங்கு விபத்து நடந்த இடம் குடியிருப்புப் பகுதியில் அமைந்திருப்பதை தமிழக அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், உரிமம் பெறாமல் குடியிருப்புப் பகுதியில் பட்டாசு கிடங்கு எப்படி இயங்கி வந்தது என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்குமாறு மாநில அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.