கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற என்எல்சி போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாமக-வைச் சேர்ந்த இவர்கள் மீது கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாமக சார்பில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாமகவினர் திடீரென கற்கள், காலணிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் 2 போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. 20 போலீசார் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.