62 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக, ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் 4 முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தீபக் பிரசாத்திடம் நடத்தப்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சம் பேரிடம் 2438 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகியாக இருந்த ஹரீஷ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கடைசியாக கடந்த ஜூலை எட்டாம் தேதி முக்கிய நிர்வாகியான தீபக் பிரசாத் என்பவரை கைது செய்தனர். இவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி முதல் இரண்டு முறை ஐந்து நாள் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தீபக் பிரசாத் வசூல் செய்து மோசடி செய்ததாக கூறப்படும் 62 கோடி ரூபாய்க்கு யார் யார் பெயரில் எங்கு எங்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து பட்டியலிடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை முகவர்கள் 500 பேரில் 200 முகவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 300 முகவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக அதிக லாபம் பார்த்த முகவர்களிடம் விசாரணை நடத்தி, சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.