கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மகளிர் வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் இத்திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை பதிவேற்றம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 923 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன. இதில் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். அதன் பின்னர், முகாம் தொடங்கி வைக்கும் பள்ளிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து உரையாற்றுகிறார்.