கோவை அழகு பார்மஸி உரிமையாளரிடம், 11 வருடங்களுக்கு முன்பு 50 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மடக்கிப்பிடித்தனர். போலீசில் சிக்காமல் தப்பிக்க தன்னை பிடித்தவரை ரவுடி என்றும் கொல்லப் போறாங்க என்றும் கூச்சலிட்டு நாடகமாடிய ஜோடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு....
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் காரில் வந்த ஜோடி ஒன்று, தங்களை மடக்கிய முககவசம் அணிந்த நபரிடம் இருந்து காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.
அந்த ஆணும் பெண்ணும், தங்களை ரவுடிகள் மிரட்டுறாங்க என்று சொல்லி காரில் ஏறி தப்பிச்செல்ல முயல, அவர்களை மடக்கிய நபரோ, இவர்கள் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் என்றும் இவர்களை பிடிக்க போலீஸ் வருகிறது என்று கூறி கார் சாவியை பறித்துச்சென்றார்.
இதையடுத்து கண்ணீர் வராமல் அழுகாச்சி நாடகம் போட்ட பெண்மணியோ தன் பெயர் சுகுணா என்றும் தனது நிலத்தை சிலர் அபகரிக்க முயல்கிறார்கள் என்று புகார் அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தால், இப்படி நடக்குது பாருங்க... என்று ஆதங்க குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கோவை அழகு பார்மஸி உரிமையாளர் அழகு ஜெயபாலை பார்த்ததும், அண்ணா என்னாங்கன்னா இப்படி? என்று பம்மினார் அந்தப்பெண்... அவரை காருக்குள் அமருமாறு கூறியும் அவர் கேட்கவில்லை.
தொடர்ந்து உங்களுக்கு தரவேண்டிய பணத்தை நீதிமன்றத்தில் மணி சூட் போட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று அந்தப்பெண் திருவாய் மலர்ந்ததும், உண்மையில் அவர் ஏதோ பணத்தை ஏமாற்றி உள்ளார் என்பதை புரிந்து கொண்டு அங்கிருந்தவர்கள் அவர்களை தப்பிச்செல்ல விடாமல் சுற்றி வளைத்தனர்.
அதற்குள்ளாக அங்கு வந்த கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைக்க, இருவரும் செல்ல மறுத்து கோர்ட் ஆர்டர் காருக்குள் இருக்கு ... என்னோட கார் சாவி வேணும், சட்டைய எப்படி கிழிக்கலாம்..? என்று டிசைன் டிசைனான உருட்ட ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த போலீசார் , அவர்கள் இருவரையும் தள்ளிச்சென்று தங்கள் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
போலீசாரிடம் சிக்கிய சுகுணா, கடந்த 2012 ஆம் ஆண்டு பீளமேட்டில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதாக கூறி அழகு ஜெயபாலிடம் , 50 லட்சம் ரூபாய் முன் பணத்துக்கான காசோலை பெற்றுவிட்டு தலைமறைவானதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுகுணாவை , அழகு ஜெயபாலின் உறவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்ததும் தெரியவந்தது.
அவர்கள் பிடியில் இருந்து தப்பிச்செல்வதற்காக , சுகுணாவும் அவருடன் வந்த நபரும், தங்களை ரவுடிகள் மிரட்டுவதாகவும் , கடத்த முயற்சிப்பதாகவும் அழுகாச்சி நாடகம் போட்டதாக போலீசார் தெரிவித்தனர்.