காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் தக்காளி கூடையுடன் பங்கேற்றனர். கேரட், வெண்டக்காய் மாலை அணிந்து கொண்டு அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் வந்ததாக குறிப்பிட்டார். தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தக்காளி விலையை கேட்டாலே காய்ச்சல் வருகிறது என்றார் அவர்
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தாய்மார்களின் சாபம் ஆட்சியாளர்களை சும்மா விடாது என்றார்.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே ஏ செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம், கே சி.கருப்பணன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதே போன்று தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.