தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனநலக் காப்பகங்களின் நிலைமையை, ஆய்வு செய்து வீடியோவாக எடுத்து அனுப்புமாறு, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புதிய தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாட்டை தொடக்கி வைத்து ஆய்வு செய்த அவர் இதைத் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலுக்கு நேற்று சென்ற அமைச்சர், அங்குள்ள அரசு மருத்துவமனை மனநலக் காப்பகத்தை ஆய்வு செய்தார்.
தனியார் பராமரிப்பில் உள்ள அந்த காப்பகத்தில் மொத்தமே 3 சிறுசிறு அறைகளில் 59 பெண்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை அங்கிருந்து மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார்.
இதுவே மனநலக் காப்பகங்களை ஆய்வு செய்யுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளதற்கு காரணம். மேலும் அன்னவாசல் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ராமுவை அமைச்சர் பணியிடை நீக்கம் செய்து ஆணையிட்டார்.