சென்னையில் 'ரூட்டு தல' பிரச்சனையில் ரயில் நிலையத்தில் அடிதடியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
வேளச்சேரியிலிருந்து அரக்கோணம் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயிலானது நேற்று மாலை வழக்கம்போல் புறப்பட்டது.
சேப்பாக்கம் ரயில் நிலையம் வந்தடைந்த ரயிலில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஏறினர். அவர்கள் அனைவரும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படும் நிலையில், கடற்கரை ரயில் நிலையம் அருகே வந்ததும் திடீரென ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
அபாயச் சங்லியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய மாணவர்கள், கத்திகள், இரும்பு ராடுகள், ஜல்லிகள் உள்ளிட்டவை கொண்டு தாக்கிக் கொண்டனர்.
மாணவர்களின் இந்த செயலால் அச்சமடைந்த சக பயணிகள், ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற ரயில்வே போலீசார், 3 மாணவர்களை கைது செய்தனர். விசாரணையில் கும்மிடிப்பூண்டி ரூட் கெத்தா, திருத்தணி ரூட்டு கெத்தா என ரூட்டு தல பிரச்சனையில் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.