புழல் சிறையில் ஏ கிளாஸ் கைதிகளுக்காக அண்மையில் மேம்படுத்தப்பட்ட உணவுப் பட்டியலின் படி செந்தில் பாலாஜிக்கு உணவு வழங்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மையில் மேம்படுத்தப்பட்ட அந்த பட்டியலின் படி, ஏ கிளாஸ் சிறைக் கைதிகளுக்கு காலை 6-30 மணிக்கு தேனீர் வழங்கப்படும்.
அதன் பின் காலை 7 மணிக்கு ஒவ்வொரு கிழமைக்கு ஏற்ப உப்மா, பொங்கல், சப்பாத்தி, முட்டை போன்றவை மாற்றி மாற்றி காலை உணவாக தரப்படும்.
பகல் 11-30 மணிக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில் கோழிக்கறியுடன் அசைவு உணவு விநியோகிக்கப்படும்.
பிற கிழமைகளில் சாதம், குழம்பு, ரசம் உள்ளிட்ட சைவ உணவு வகைகள் வழங்கப்படும். ஞாயிறு மற்றும் வியாழக் கிழமை மதிய உணவுகளில் ரவை கேசரி இனிப்பும் வழங்கப்படுகிறது.
பின்னர் மாலை 3 மணிக்கு தேனீருடன், கிழமைக்கு ஏற்ப கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பச்சைப் பட்டாணி போன்ற சுண்டல்களும் வழங்கப்படும்.
இரவு உணவாக சோறு, சாம்பார், ரசம், கறிகாய் கூட்டு உள்ளிட்டவை வழங்கப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறை மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியை கவனித்துக் கொள்ள உதவி ஜெயிலர் ஒருவரும் முதல் நிலை சிறை காவலர் ஒருவரும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரி கூறியுள்ளனர்.