சென்னை மற்றும் விழுப்புரத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 70 லட்ச ரூபாய் இந்திய பணமும், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் அமைச்சர் பொன்முடி அவரது மகனான கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. கௌதம சிகாமணி ஆகியோர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப அமைச்சர் பொன்முடி வீட்டில் புறப்பட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், காலை 7 மணி வாக்கில் அமலாக்கத்துறையினர் மத்திய ரிசர்வ் படை வீரர்களுடன் 3 வாகனங்களில் பொன்முடி வீட்டுக்கு வந்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் பொன்முடி வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். வீட்டு வாசலில் நின்றிருந்த அமைச்சரின் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரிலும் சோதனை நடத்திய அதிகாரிகள், அதில் இருந்த பல்வேறு ஆவணங்களை வீட்டிற்குள் எடுத்துச்சென்று ஆய்வு செய்தனர். பொன்முடியின் வீட்டில் உள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்து யாருடையது என்பதை சரிபார்க்க மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.
முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலக்கட்டத்தின் வங்கி பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்வதற்காக பொன்முடியின் சென்னை இல்லத்துக்கு இந்தியன் வங்கி அதிகாரிகளும் நகை மதிப்பீட்டாளர்கள் 2 பேரும் வரவழைக்கப்பட்டனர்.
சோதனையின் போது பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 70 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய பிரிட்டிஷ் பவுண்டுகள் மற்றும் அமெரிக்க டாலர்களையும் கண்டெடுத்ததாக சொல்லப்படுகிறது.
மறுபுறம், பொன்முடியின் சொந்த ஊரான விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொன்முடியின் குடும்பத்தினர் நடத்தி வரும் விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி, கப்பியாம்புலியூர் பகுதியில் உள்ள சிகா என்ற பள்ளி மற்றும் கல்வி அறக்கட்டளையிலும் சோதனை நடத்தப்பட்டது.
விழுப்புரம் வீட்டில் உள்ள ஒரு பகுதியில் அலுவலகமாக செயல்பட்டு வரும் அறையில் 2 பீரோக்கள் மற்றும் ஒரு லாக்கரை திறந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்ட போது, அதற்கு சாவி இல்லை என்று அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சாவி தயாரிக்கும் நபரை வரவழைத்து 2 பீரோக்களுக்கு சாவி தயாரித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு லாக்கரை திறக்க சாவி தயாரிப்பாளரால் முடியாததால் புதுச்சேரியில் இருந்து நிபுணரை வரவழைக்க அமலாக்கத் துறையினர் முடிவு செய்தனர்.
சென்னை கே.கே. நகரிலுள்ள பொன்முடியின் உறவினருக்கு சொந்தமான கே.எம். மருத்துவமனைக்கு மாலையில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் நோயாளிகள் போல காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் திடிரென உள்ளே சென்று நோயாளிகள் வருகை பதிவேடு கைப்பற்றி இரண்டாவது தளத்தில் உள்ள அறை ஒன்றில் கணக்காளர் பிரபு என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கனிமவளத் துறையை கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள், செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பொன்முடி, கவுதம சிகாமணி, ஜெயச்சந்திரன் என்ற உறவினர் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை புதிதாக வழக்கை பதிவு செய்து சோதனையை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், எம்.பி. கௌதம சிகாமணி மீது அமலாக்கத் துறையில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கின் அடிப்படையிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2008-ஆம் ஆண்டில் கௌதம சிகாமணி விதிகளை மீறி இந்தேனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள பி.டி. எக்ஸல் மெக் இந்தோ என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதாகவும், அதன் மூலம் சம்பாதித்த 7 கோடியே 5 லட்ச ரூபாய் வருவாயை மறைத்ததாகவும் அமலாக்கத்துறை அந்நிய செலவாணி வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு சுமார் 8 கோடி மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இவ்வழக்கின் தொடர்ச்சியாகவும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.