திருமண நிச்சயதார்த்தம் முடிந்த இளம் ஜோடி ஒன்று தாங்கள் தங்கிய ஓட்டல் அறையில் வைக்கப்பட்டிருந்த ரகசிய காமிராவை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த காமிராவை கையோடு கழட்டி எடுத்துக் கொண்டு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டது. புதுச்சேரிக்கு வீக் எண்ட் சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு....
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா செல்வது வழக்கம், குடும்பத்துடன் செல்பவர்கள் சுற்றுலாதளங்களை தேடிச்சென்றால், ஜோடியாக செல்வோர் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை நாடிச்செல்கின்றனர்.
அந்தவகையில் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஜே.ஜே ரெசிடன்ஸி என்ற தங்கும் விடுதியில் அதே ஊரை சேர்ந்த ஜோடி ஒன்று கடந்த சனிக்கிழமை காலை 11 மணிக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அங்கு ஓய்வு எடுத்த இருவரும் 12 மணி அளவில் அந்த ஓட்டல் அறையில் சிவப்பு நிற விளக்கு ஒன்று மின்னி மறைவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து படுக்கைக்கு எதிரில் இருந்த டிவிக்கு அருகில் இருந்த கேபிள் இணைப்புக்கான பிளக் பாயிண்டில் இருந்து இந்த சிவப்பு லைட் எரிவதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து வெளியில் சென்று ஸ்குரூடிரைவர் வாங்கி வந்து அந்த பிளக் போர்டை கழட்டி பார்த்த போது , அதன் உள்ளே சிறிய அளவிலான ரகசிய காமிரா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது இயங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோடி இதனை வீடியோவாக பதிவு செய்து ஓட்டல் நிர்வாகத்திடம் சொன்னதாக கூறப்படுகின்றது.
அவர்கள் கண்டுகொள்ளாததால் தங்கள் வீடுகளுக்கு சென்று நடந்ததை உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உருளையன் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விடுதி நிர்வாகத்துடன் பேரம் பேசிக் கொண்டு வழக்கு பதிவு செய்யாமலும், விசாரிக்காமலும் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இது தொடர்பான தகவல் ஊடகங்களில் வெளியானதால் வழக்கு பதிவு செய்த போலீசார் , அந்த ஓட்டலில் ஒவ்வொரு அறையாக சோதித்த போது மேலும் 3 அறைகளில் இது போன்று காமிரா வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. அங்கு பணியில் இருந்த தேங்காய்த்திட்டு ஆனந்த் மற்றும் அரியாங்குப்பம் ஆபிரகாம் ஆகிய இருவர் தான் இந்த விபரீத செயலில் ஈடுபட்டதும் அவர்கள் வீடியோ பதிவான டி.வி.ஆர் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் இளையாள்வார், பொறுப்பாளர் இருதயராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஓட்டல்களில் தங்குகின்ற சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.