கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சாலையோரம் திருநங்கை ஒருவரின் மடியில் படுத்துக் கொண்டு கொட்டம் அடித்துக் கொண்டிருந்த மதுப்பிரியரை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அடித்து ஓடவிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்ட தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் மது கடைக்கு வரும் குடிமகன்கள் மது வாங்கி சாலையின் இருபுறங்களிலும் அமர்ந்து மது குடித்துவிட்டு போதையில் அங்கேயே படுத்து தூங்குவதாகவும், ஒருசில மன்மத மதுப்பிரியர்கள் அங்கு மது அருந்த வரும் திருநங்கைகளின் மடியில் படுத்துக் கொண்டு முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
சம்பவத்தன்று திருநங்கை ஒருவரின் மடியில் படுத்தபடி சேட்டையில் ஈடுபட்ட நபரை அந்தவழியாக சென்ற ஒருவர் சத்தம் போட்டு விரட்டினார். ஆனால் எழுந்திருக்க மறுத்து மதுப்பிரியர் அடம் பிடித்ததால் , அவரை தூக்கி பக்கத்தில் இருந்து சாக்கடை கால்வாயில் தள்ளி விட்டு மிதித்தார்.
அப்படி இருந்தும் கோபம் அடங்காத அந்த நபர் பெரிய அளவிலான கல்லை தூக்கிக் கொண்டு வந்தார், அவ்வளவு தான் மண்டைய பிளந்திருவார் போல என்ற அச்சத்தில் அந்த லோ பட்ஜெட் மன்மதன் எழுந்து ஓடினார். தன்னை ஒருவர் படம் பிடிப்பதை பார்த்ததால் கல்லை மதுப்பிரியர் மீது வீசாமல் கீழே போட்டார்.
அத்தோடு விடாமல் மதுப்பிரியரை காலால் எட்டி உதைத்து அங்கிருந்து விரட்டி விட்டார். வாங்கிய அடியில் குடித்த போதை தெளிந்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த மதுப்பிரியர்.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அந்தப்பகுதி குடியிருப்புவாசிகள் சாலையோரம் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்யும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.