சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைத்துவிட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்ற ஆர்வலர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், காலணிகள், கடிகாரங்கள் உள்ளிட்ட 28 வகை பொருட்களை ஏலம் விடுவதற்கு ஏதுவாக கர்நாடகா நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை , ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எந்த பொருளும் தங்களிடம் இல்லை எனவும், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்தவை ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் பதிலளித்துள்ளதாக ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தெரிவித்தார்.
பறிமுதல் செய்து ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை உரியவர்களிடமே எவ்வாறு திருப்பி ஒப்படைக்க முடியும் என கேள்வி எழுப்பிய நரசிம்ம மூர்த்தி, இது குறித்து வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார்.