தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன், நடிகர் விஜய், இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை பனையூரில், 234 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினருடன், தொகுதி நிலவரம் குறித்த நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். 16 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை, நேற்று தனித்தனியே சந்தித்த விஜய், அவர்களிடம், தொகுதி நிலவரம், ஆதரவு விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்ததோடு, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், இன்று 2ஆவது நாளாக ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து நடிகர் விஜய் இனோவா காரில் புறப்பட்டு பனையூர் சென்றார். அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் அவருடன் இருசக்கர வாகனங்கள் உடன் சென்றனர்.
பனையூர் அலுவலகத்தில் எஞ்சிய 22 மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை மாலை 5 மணி வரை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து நாளையும் விஜய் மகள்ள இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் தொடர்ந்து 3-வது நாளாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், வருகிற 15ஆம் தேதி முதல், இலவச இரவு பாட சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தொடங்கப்படும் இலவச இரவு பாட சாலை திட்டத்திற்கான இடம் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான வாடகை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்படுவதோடு, ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.