தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 12 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் ஜி விஜயராகவன் உட்பட இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதற்காக 34 லட்ச ரூபாயை ஒதுக்கியது. இதற்கான டெண்டர் விடப்பட்ட போது, கடைசி நேரத்தில் தாமதமாக முன் பதிவு செய்தததாகக் கூறப்படும் டெக் சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.
32 லட்ச ரூபாய்க்கு டெண்டரைப் பெற்ற நிறுவனத்தின் மேலாளர் விஜயகுமார், ஸ்கேன் செய்வதற்கும் டிஜிட்டல் வடிவத்தில் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதற்கும் மட்டும் மின்பொருட்களை வாங்காமல், ஓலைச்சுவடி பாதுகாப்பு மையத்துக்கு மரச் சாமான்கள் வாங்கியது, கேமரா, ஏசி வாங்கியது என்பது போன்ற கணக்குகளை காட்டியதாக ரவிக்குமார் என்ற சமூக ஆர்வலர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார்.
விசாரணையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு இருக்க வேண்டும், அது தொடர்பான முன் அனுபவம் வேண்டும் என்பன போன்ற தகுதிகள் எதுவும் டெக்ஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷன் நிறுவனத்திற்கு இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து விஜயகுமார் மீதும் அவரது இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் விஜயராகவன் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.