சென்னையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டதில் மருத்துவர்கள், செவிலியர்களை காப்பாற்ற முயற்சி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி உள்ள குழந்தையின் தாய் அஜிஸா, மகனின் கை பறிபோனதற்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர்- அஜிஸா தம்பதியரின் குழந்தை முகமது மாஹீர். தலையில் நீர் கோர்த்திருந்த பிரச்னைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு முகமது மாஹீருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தலையில் உள்ள நீர் வெளியேறும் வகையில் உடலுக்குள் டியூப் வைக்கப்பட்டிருந்தது.
இந்த, டியூப் வெளியேறியதால் கடந்த மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, டியூப் வழியாக மருந்து செலுத்தும் வகையில் கையில் சொருகப்பட்ட ஊசி சரியாக சொருகப்படவில்லையென குழந்தையின் தாய் அஜிஸா குற்றம்சாட்டி உள்ளார்.
குழந்தையின் கை அழுகியது கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குழந்தையின் வலது கை ஞாயிறன்று அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.
மருத்துவப்பணியாளர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் தான் தனது மகனின் கை பறிபோய் உள்ளதாக அஜிஸா குற்றம் சாட்டியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் குழந்தை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குழந்தை பிறந்தது முதலே ரத்த ஓட்டம், இருதயம் சார்ந்த பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்துள்ளதாக பதிலளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
குழந்தை நன்றாகத்தான் இருந்தது என்று நான் சொன்னதாக சொல்கிறார்கள். குழந்தை நல்லா இருந்தால் டாக்டர் ஏன் ஆயின்மென்ட் எழுதித் தர வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார் அஜிஸா.
எழுதிக் கொடுத்த ஆயின்மென்ட் எங்களிடம் நிறையவே உள்ளது. ஆனாலும், ஏன் எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது என தெரிவித்தார் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன்.
குழந்தையின் பெற்றோர் சொல்லும் மருத்துவர்களைக் கொண்டு விசாரணை நடத்தவும் தயாராக இருப்பதாக கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்து போடப்பட்ட கையெழுத்தை நாங்கள் சம்மதம் தெரிவித்ததன் ஆதாரமாக காட்ட முயல்வதாக கூறினார் அஜிஸா.
அரசு ஆஸ்பத்திரி என்றாலே அலட்சியமாக இருப்பார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயல்வதாக கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
என் மகனின் கேஸை மூடிவிடலாம் என நினைக்கிறார்கள். மகனின் கை போனதற்கு எனக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றார் அஜிஸா.
இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 3 குழுக்களின் விசாரணை அறிக்கைகளும் செவ்வாய் மாலையில் கிடைத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குழந்தையின் கை அகற்றப்பட்டது தொடர்பாக பெற்றோர் தரப்பில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.