மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து கர்நாடாகாவின் அணை கட்டும் முயற்சியை தமிழ்நாடு அரசு முறியடிக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு துரைமுருகன் அளித்துள்ள பதிலில், கர்நாடக அரசு அவ்வப்போது மேகதாது பிரச்சனையை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், இது அரசியல் நிர்பந்தத்திலா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது என்று குறிப்பிட்டுள்ள துரைமுருகன், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தம்மிடம் தெரிவித்ததை சுட்டிகாட்டியுள்ளார்.
தமிழக உரிமைகளை காக்கவும், விவசாயத்திற்கு தடையின்றி நீர் வழங்கவும் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்றும் இப்பிரச்சனையில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் துரைமுருகன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.