பட்டா நிலம் வழியாக சடலத்தை தூக்கிச்செல்ல வழி மறுக்கப்பட்டதால், சடலத்துடன் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 85 வயது மூதாட்டியின் உடலை ஆயுதமாக்கி நடந்த உரிமைப் போராட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..
அந்த சாதிக்காரங்க சடலம் எங்க நிலத்து வழியாக போகக்கூடாது... என்று இந்த சாதிக்காரங்க மறித்ததால், தங்களுக்கான உரிமைக்காக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்ட காட்சிகள் தான் இவை..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கிருஷ்ணாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 85வயதான லட்சுமம்மா என்பவர் வயதுமூப்பால் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அடக்கம் செய்வதறகாக உறவினர்கள் தூக்கிச்சென்றபோது, வழக்கமாக செல்லும் பட்டா நிலத்தைச் சுற்றி கல் நட்டு கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தாங்கள் வேலியை அகற்றிவிட்டு அந்த வழியாகத்தான் போவோம் என்று ஒரு தரப்பினர் சொல்ல , பட்டா நிலத்துக்குள் சடலத்தை அனுமதிக்க மற்றொரு தரப்பு மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
இருவரும் வேறு வேறு சாதி என்பதால் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மயானத்திற்கு பாதைக்கேட்டு மூதாட்டியின் சடலம் தூக்கிச்செல்லப்பட்ட பாடையை சூளகிரி - பேரிகைசாலை கூட்டுரோடு பகுதியில் வைத்து 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் இரு தரப்பிலும் பேசி பார்த்தனர். தங்கள் நிலைப்பாட்டில் இரு தரப்பினரும் உறுதியாக இருந்தனர்.
இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியின் உறவுக்கார இளைஞர்கள் , சடலத்தை தூக்கிக் கொண்டு கிருஷ்ணகிரி சாலையை நோக்கிச்சென்றனர். தடுக்க முயன்ற போலீசாரை மீறி ஆவேசமாக தூக்கிச் சென்றனர்
பாடையை தூக்கிச்சென்ற இளைஞர்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டதால் போலீசாரால் தடுக்க இயலவில்லை.
மூதாட்டியின் சடலத்துடன் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து இளைஞர்கள் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது
தொடந்து அங்கு வந்த டி.எஸ்.பி சங்கு தலைமையிலான போலீசார் இளைஞர்களை சமாதானப்படுத்த முயன்றனர். தங்களுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாக இளைஞர்கள் அடங்க மறுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார், போலீசார் மூலம் அந்த மூதாட்டியின் சடலத்தை தூக்கிச்செல்லவைத்தார். சாலையோரமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. வருங்காலத்தில் மயானம் செல்ல நிலையான பாதை ஏற்படுத்தி தருவதாக போலீசார் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெரும் பரபரப்பு நிலவியது