ரம்மி விளம்பரத்தில் சம்பாதித்த பணத்தை , ரம்மியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திரும்ப வழங்குவீர்களா? என்ற கேள்விக்கு தன்னிடம் வந்து பணம் கேட்கட்டும் , முடிவெடுக்கிறேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கேட்டதால் செய்தியாளருடன் உண்டான வாக்குவாதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
போர்த்தொழில் படத்தின் சக்சஸ் மீட்டில் செய்தியாளர்களை சந்திக்க உற்சாகமாக மேடையில் இருந்து குதித்து வந்தார் சரத்குமார்.
சரத்குமாரிடம் , நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்ப, தான் ஏற்கனவே பலமுறை கூறி விட்டதாக கூறிய சரத்குமார் நழுவ நினைக்க, அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்டதும் முகம் மாறியது... அவர் தான் தனது கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றார் சரத்குமார்.
அந்த செய்தியாளர் விடாமல் சரத்குமாரை கேள்விகளால் குடைந்ததால் ,காண்டான சரத்குமார், உங்கள் நிறுவன உரிமையாளரின் கருத்தை வாங்கிப்போடுங்கள் என்று கூறியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் வழுத்தது.
ஒரு கட்டத்தில் மேடைக்கு வா பதில் சொல்கிறேன் என்று அழைத்த சரத்குமாரிடம், ரம்மியால் உயிரிழந்தவர்களுக்கு, ரம்மி விளம்பரத்தில் சம்பாதித்த பணத்தை திருப்பிக் கொடுப்பீர்களா ? என்று கேள்வி எழுப்ப பட்டது, அவ்வளவு தான் கடுப்பான சரத்குமார், என்கிட்ட வந்து கேட்கட்டும் நான் முடிவெடுக்கிறேன் எனக்கூறி மேடையில் இருந்து சென்றார்.
கடுப்பில் கிளம்பிச்சென்ற சரத்குமாரிடம் இளைஞர் ஒருவர் செல்பி கேட்க, அவர் சிவக்குமார் போல செல்போனை தட்டிவிடாமல் நின்று நிதானமாக சிரித்தவாறு அவருடன் ஒரு செல்பியை எடுத்துக் கொண்டு சென்றார்.