சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக ஆட்டோ நிறுத்தம் அமைத்ததில் ஏற்பட்ட மோதலில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞரை ஆட்டோ ஓட்டுநர்கள் சரமாரியாக தாக்கிய நிலையில், வரையறையின்றி ஆட்டோ நிறுத்தங்கள் அமைப்பதை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
ஓமலூர் பேருந்து நிலையம் அருகே புதிய ஆட்டோ நிறுத்தத்திற்கு ஆதரவாக மதுபோதையில் வந்த இரண்டு பேர் அங்கிருந்த ஒருவரை மதுபாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தபோது ஒருவர் தப்பி ஓடியுள்ளார். மற்றொருவரை பிடித்த ஓட்டுநர்கள் அவரது சட்டையை கழற்றி சரமாரியாக தாக்கி கைகளை கட்டிப்போட்டனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போதை இளைஞரும், ஆட்டோ ஓட்டுநர்களும் அங்கிருந்து சென்ற நிலையில், வெகு நேரத்திற்கு பிறகே போலீசார் வந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
புதிதாக அமைக்கப்பட்ட ஆட்டோ நிறுத்தத்தை அகற்றி, ஒரே இடத்தில் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.