கடன் தவணையை கட்டச் சொல்லி தொழிலாளியின் வீட்டிற்கே வந்து நெருக்கடி கொடுத்த மைக்ரோபைனான்ஸ் ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் முன்னிலையில் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்து வந்தவர் நரசியர்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயவேல். 3 ஆவது மனைவி பழனியம்மாளுடன் வசித்து வந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கூலி வேலைப்பார்த்து வரும் பழனியம்மாள் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பெல் ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 80 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். மாத தவணையாக 4 ஆயிரத்து 870 ரூபாய் வீதம் 24 மாதங்களுக்கு செலுத்த வேண்டிய நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தவணைத்தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால், பைனான்ஸ் நிறுவனத்தின் 2 ஊழியர்கள், பழனியம்மாளுக்கு கடன் வாங்கிக் கொடுத்த மகளிர் மன்ற நிர்வாகிகள் 3 பேரை அழைத்துக் கொண்டு ஜெயவேல் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவரிடம் தவணை தொகையை கேட்ட போது தன்னிடம் தற்போது பணமில்லை, அடுத்த மாதம் மொத்தமாக கட்டி விடுவதாக ஜெயவேல் கூறியதாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த பைனான்ஸ் ஊழியர்கள் இப்போதே பணம் வழங்க வேண்டுமென கூறியதோடு, பணத்தை வாங்காமல் வீட்டை விட்டு போக முடியாது என அடம்பிடித்து வீட்டின் முன்பு சேர் போட்டு அமர்ந்ததாக சொல்லப்படுகிறது.
வீட்டை விட்டு கிளம்பவில்லையெனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொள்வேன் என ஜெயவேல் மிரட்டிய நிலையில், இது வழக்கமாக அவர் அடிக்கும் டயலாக் தான் என அவரது பேச்சை பைனான்ஸ் ஊழியர்கள் சட்டை செய்யவில்லை என கூறப்படுகிறது.
வீட்டின் கதவுகள் திறந்திருந்த நிலையில், நாற்காலி மீது ஏறி திரைச்சீலையை எடுத்து மின்விசிறியில் கட்டிய ஜெயவேல் தூக்கிட்டுக் கொண்டதாகவும், இதனை அந்த 5 பேரும் வீட்டின் முன்பு அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து திரைச்சீலையை அறுத்து அவரை கீழே இறக்கி உள்ளார்கள். அதற்குள் ஜெயவேல் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் 3 பேர் அங்கிருந்து ஓடி விட, பைனான்ஸ் ஊழியர்கள் 2 பேரை பிடித்து தருமபுரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அக்கம்பக்கத்தினர்.
மாமியாரிடம் பணம் கேட்டுள்ளேன், நாளைக்கு பணம் தந்ததும் தவணையை கட்டி விடுவேன் என 5 பேர் காலில் விழுந்தும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேச் செல்லவில்லையென கண்ணீரோடு கூறினார் ஜெயவேலின் தாயார் சின்னபொண்ணு.
பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட பைனான்ஸ் ஊழியர்கள் 2 பேரிடமும் முகவரியை மட்டும் எழுதி வாங்கிக் கொண்டு போலீஸார், அவர்களை அனுப்பி வைத்தனர். தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என ஜெயவேலின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க மறுத்த பெல் ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அந்த நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.