தாய், தந்தை, சகோதரியை இழந்து கல்லூரிப் படிப்பை தொடர இயலாமல் தவித்த மாணவியை கட்டணம் இல்லாமல் ராசிபுரம் முத்தையம்மாள் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. தவித்து நின்ற மாணவிக்கு தாயுள்ளத்துடன் நீண்ட உதவிக்கரங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த கல்பாரப்பட்டியைச் சேர்ந்த மாணவி அமுதா பிளஸ்-2 தேர்வில் 600க்கு 574 மதிப்பெண் எடுத்த நிலையில், தாய் தந்தை மற்றும் சகோதரியை விபத்தில் பறிகொடுத்துவிட்டு கல்லூரியில் சேர இயலாமல் நிர்க்கதியாகத் தவித்தார். இது தொடர்பான செய்தி வெளியான நிலையில் மாணவி அமுதாவைத் தொடர்புகொண்ட நூற்றுக்கணக்கான நல்லுள்ளங்கள் ஓடோடிச்சென்று உதவிக்கரம் நீட்டி உள்ளன.
அந்த மாணவி எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என ஆசைப்பட்டாரோ, அதே ராசிபுரம் முத்தையம்மாள் கல்லூரி 2,500 ரூபாய் கட்டணத்தில் மாணவியை கல்லூரியில் சேர்த்துக் கொண்டதாகவும், மாணவிக்கு 4 ஆண்டுகளுக்கான படிப்புச் செலவை முழுமையாக ஏற்பதாகவும் டாக்டர் தருண் என்பவர் தெரிவித்து இருப்பதாக மாணவி அமுதா தெரிவித்தார்
அதிமுக, பா.ம.க. என பல்வேறு கட்சியினரும் மாணவியின் இல்லம் தேடிச்சென்று நிதியுதவி செய்ததாகவும், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், தாடி பாலாஜி ஆகியோரும் அகரம் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மாணவியைத் தொடர்பு கொண்டு உதவுவதாக நேசக்கரங்கள் நீட்டி உள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும் மாணவி அமுதாவுக்குத் தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறி உள்ள நிலையில், மாணவிக்கு உதவுவதாகக் கூறி சிலர் போலியான வங்கி கணக்குகளில் சமூக வலைதளங்களில் வசூல் செய்வதாகவும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பாமக எம்.எல்.ஏ அருள் தெரிவித்தார்