தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் 6 புதிய தொழில்பேட்டைகள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில் பங்கேற்ற அவர், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு தொழில் துவங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்க சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அவசியம் என்றார். நடப்பு நிதி ஆண்டில் சேலம், ஒசூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் துவங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக சென்னை மற்றும் கோவையில் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.