ஆற்காடு அருகே திருமண நாளன்று கோயிலுக்கு சென்ற கணவன் - மனைவி, தனியார் பேருந்து மோதி உயிரிழந்தனர். விபத்துக்குக் காரணமான தனியார் பேருந்து ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்துள்ள அரும்பாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் - சங்கீதா தம்பதி. தங்களது திருமண நாளையொட்டி இரண்டு வயது ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆற்காட்டில் உள்ள பச்சையம்மன் கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.
கடப்பந்தாங்கல் அருகே சென்றபோது ஆற்காட்டில் இருந்து வந்தவாசி செல்லும் தனியார் பேருந்து தம்பதியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை சிறுகாயங்களுடன் உயிர் தப்பியது. குழந்தையை பொது மக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த ஆற்காடு போலீசார், தம்பதியின் உடலை ஆற்காடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முற்பட்டனர். ஆனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேருந்து ஓட்டுனர் மீது தான் தவறு என்றும் உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து, உறவினர்கள் உடல்களை பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர். பாலிமர் செய்திகளுக்காக ராணிப்பேட்டை செய்தியாளர் மார்ட்டின்.