சமூகவலைத்தளத்தில் லைக் வாங்குவதற்காக திருவண்ணாமலையில் கிணற்றில் குதித்த இளைஞர் நீரில் மூழ்கிய நிலையில், தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. சென்னை மாங்காட்டில் குடும்பத்தோடு தங்கியிருந்து கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் ஏழுமலைக்கு, சச்சின், சரண் ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
கிராமத்தில் நடைபெறும் குலதெய்வ விழாவிற்காக குடும்பத்தோடு சென்றார் ஏழுமலை. தனியார் மருந்து நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சரண், தனது நண்பனான ரமேஷ் என்பவரையும் கரிப்பூருக்கு அழைத்து சென்றுள்ளார்.
சனிக்கிழமை மதிய நேரத்தில் ரமேஷை விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் சரண். அங்கிருந்த பெரிய கிணற்றை பார்த்ததும், தான் கிணற்றில் குதிப்பதை வீடியோவாக எடுக்குமாறு ரமேஷிடம் சரண் கூறியதாக சொல்லப்படுகிறது.
கிணற்றில் குதிப்பதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதிக லைக்குகளை வாங்கப் போகிறேன் என்று கூறி, உடைகளை களைந்து விட்டு உள்ளாடையோடு நீர் நிரம்பியிருந்த கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் பதற்றத்திற்கு உள்ளான ரமேஷ் கூச்சலிட்டுள்ளார்.
பக்கத்து வயல்களில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்கள் அங்கு வந்து பார்த்த போது சரண் தண்ணீருக்குள் மூழ்கியிருந்ததால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை வெளியேற்றினால் தான் உடலை வெளியே எடுக்க முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 5 டீசல் என்ஜின்கள் மூலமாக சுமார் 6 மணி நேரமாக இறைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கிணற்றின் உள்ளே இறங்கிய தீயணைப்புத் துறையினர், அடிப்பகுதியில் சிக்கியிருந்த உடலை கயிறு கட்டி மீட்டனர். சடலத்தை உடற்கூறாய்விற்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சேத்துப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.
முகம் தெரியாத சிலரிடமிருந்து லைக் பெறுவதற்காக விபரீதத்தில் சிக்கி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்த வேண்டாமென போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.