அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன், சட்ட விரோதமாக சிறை பிடிக்கவில்லை என அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கான பதில் மனுவில், ஜூன் 13ஆம் தேதி நடந்த சோதனையின் போது அமைச்சர் அங்கு இருந்தார் என்றும் அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு என்றும் அமலாக்கத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
விசாரணைக்கான சம்மனை பெற மறுத்து, அதிகாரிகளை மிரட்டும் தொணியில் செந்தில் பாலாஜி நடந்து கொண்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து, செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற குற்றம் புரிந்துள்ளார் என நம்ப போதுமான காரணங்கள் உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.