ராமேஸ்வரம் நகராட்சியில் தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஒன்றாவது வார்டிற்கு உட்பட்ட ஏரகாடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக மாறியதால் புதிய சாலை அமைக்க ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சேதமடைந்த பழைய சாலையை அகற்றாமல் அதன் மீது குப்பை மண்ணைப் போட்டு தார் ஊற்றி சாலை அமைத்து விட்டதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
ஏரகாட்டில் முதல் கட்ட பணிகள் மட்டும் முடிந்துள்ளதாக தெரிவித்த ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் கண்ணன், புதிய சாலையில் கனரக வாகனங்களை இயக்கி சோதனை செய்த பின்னரே சாலையை போட்ட ஒப்பந்ததாரருக்கு நிதி வழங்கப்படும் என்றும், முறையாக அமைக்கப்படாமல் இருந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.