திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் காஞ்சிபுரம் நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த மகேஸ்வரி, துப்புரவு பணிக்காக லைசால் கொள்முதல் செய்தபோது, நிர்ணயித்த விலையை விட 32 லட்சம் ரூபாய் கூடுதலாக கணக்கு காண்பித்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
இது தொடர்பாக, ஆர்.எம். காலனியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் நகராட்சியில் மகேஸ்வரி பணியாற்றியபோது, துப்புரவு ஆய்வாளர்களாக இருந்து தற்போது வேறு இடங்களுக்கு பணியிட மாற்றமாகி உள்ள இக்பால், ரமேஷ்குமார், ராதாகிருஷ்ணன், உதவி அலுவலர் சந்தவள்ளி ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.