திருவண்ணமலை அருகே புனல்காடு கிராமத்தில் மலையடிவாரத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் , போலீசார் முன்பு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை 39 வது வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த குப்பை கிடங்கில் கொட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக புனல்காடு கிராமத்தில் உள்ள மலையடி வாரத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில் புதிய குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு வந்தது. இதனை கண்டித்து புனல்காடு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம், சமைத்து உண்ணும் போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, தலைகீழாக நின்று போராட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதனால் குப்பை கிடங்கு அமைக்கும் இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் குப்பை கிடங்கு அமைக்க உள்ள இடத்தில் காவல்துறை உதவியுடன் மாவட்ட நிர்வாகம் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, மண்வளம் கெட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும், இதனால் தங்களது கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணியை மாவட்டம் நிர்வாகம் கைவிட வேண்டும் என புனல்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பணிகளை தொடர முயன்றதால். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குமாரி மற்றும் நிர்மலா ஆகிய இரண்டு பெண்கள் , குப்பை கிடங்கிற்கு எதிரே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
விபரீதமாக கிணற்றில் குதித்த பெண்களின் முடிவை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் துரிதமாக செயல்பட்டு இரண்டு பெண்களையும் கட்டிலில் கயிறு கட்டி மேலே மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் ஆழம் குறைவாக காணப்பட்டதால் இரு பெண்களும் உயிரோடு மீட்கப்பட்டதாகவும், இல்லெயென்றால் விபரீதம் நிகழ்ந்திருக்கும் என்றும் கூறிய உள்ளூர் வாசிகள், தங்கள் கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த குப்பை கிடங்கு திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்