கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் காய்ச்சலுக்காக தனியார் கிளினிக்கில் போடப்பட்ட ஊசியால் 4 வயது சிறுமி பலியானதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காய்ச்சல்ன்னு கஷ்டப்பட்ட தங்கள் வீட்டு சிறுமியை தவறான ஊசியால் பறிகொடுத்து விட்டதாகக் கூறி கதறி அழும் பெண்கள் ஒருபுறம்... மருத்துவரை கைது செய்யக் கூறி ஆவேசமாக சாலை மறியலில் ஈடுபடும் மக்கள் மறுபுறம் ... சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடந்த போராட்டக் காட்சிகள் தான் இவை..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது 4 வயது மகளான பானுஸ்ரீ கடந்த 13ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் தனது மகளை பாஸ்கர் காடாம்புலியூர் பகுதியில் உள்ள ஆர்.பி. சாமி கிளினிக்கு அழைத்து சென்றார்.
அந்த கிளினிக்கில் இருந்த டாக்டர் சரவணகுமார் ரவி என்பவர் சிறுமியை பரிசோதித்து சிகிச்சைக்கான மருந்து சீட்டில் ஊசி மற்றும் சிரப்பு எழுதிக் கொடுத்து அங்கு பணிபுரியும் செவிலியரிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.
செவிலியர் அந்த மருந்து சீட்டை பார்த்து குழந்தையின் இடுப்பில் 2 ஊசிகள் போட்டதாகவும், அதன் பிறகு எழுதிக் கொடுத்துள்ள சிரப்பு வாங்கிக்கொண்டு பாஸ்கரன், தனது மகளை வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பின்னர் ஊசி போட்ட இடத்தில் வலிப்பதாக கூறி சிறுமி அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் ஊசி போட்ட இடத்தில் குளிர்ச்சியான தண்ணீர் பாட்டில் வைத்து பெற்றோர் ஒத்தடம் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் ஒத்தடம் கொடுத்த இடத்தில் பெரிய அளவிலான கொப்பளம் தோன்றியதால், வலி தாங்க முடியாமல் சிறுமி தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாக சொல்லப்படுகின்றது.
சிறிது நேரத்தில் அழுது கொண்டிருந்த சிறுமி சோர்வடைந்து மயங்கியதாகவும், இதைப் பார்த்த பெற்றோர் தங்கள் மகள் தூங்குகிறாள் என்று நினைத்து தூங்கிவிட்டனர்.
காலையில் எழுந்த பெற்றோர் நீண்ட நேரம் தூங்கிய தங்கள் மகளை எழுப்பிய போது, அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பானுஸ்ரீயை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் இறந்த குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தவறான ஊசியால் தங்கள் வீட்டுப்பிள்ளை உயிரிழந்ததாக கூறி ஆவேசம் அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்த ஆர்.பி. சாமி கிளினிக் மருத்துவரை கைது செய்ய கோரி காடாம்புலியூர் காவல் நிலையம் அருகில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் அளித்த உறுதி மொழியை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து ஆர்.பி. சாமி கிளினிக்கின் மருத்துவர் சரவணகுமார் ரவியை பிடித்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.