மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் இருவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில், இறந்தவர்கள் குடித்த மதுபாட்டில்களில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
மங்கை நல்லூர் கடை வீதியில் இரும்பு பட்டறை நடத்திவந்த குத்தாலம் தாலுகா தத்தங்குடியைச் சேர்ந்த பழனி குருநாதனுடன், அவரிடம் பணிபுரிந்து வந்த பூராசாமியும், வாந்தி மயக்கத்துடன் நேற்றுமுன் தினம் பட்டறையில் மயங்கி கிடந்தனர். அவர்கள் அருகில் ஒரு முழு குவாட்டர் மது பாட்டிலும், காலியான ஒரு குவாட்டர் பாட்டிலும் இருந்தது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரின் உயிரிழப்புக்கும் டாஸ்மாக் மதுபானமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை தஞ்சாவூர் தடயவியல் மருத்துவ குழு ஆய்வு செய்தது.
இதில் திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் மதுபாட்டிலில் சயனைடு கலக்கப்பட்டதற்கான பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.