சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மருத்துவமனை பணியாளர் லஞ்சம் பெறுவதாக சிகிச்சை பெற வந்தவர்களின் உறவினர்கள் ஆதாரத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளனர்.
சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரசவ வார்டில் பணியாற்றும் பெண் இவர்.
இந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட வாழப்பாடியைச் சேர்ந்த ஜமுனாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை பார்க்க வந்த தன்னிடம் பெண் பணியாளர் லஞ்சம் பெற்றதை செல்ஃபோன் மூலம் பதிவு செய்தார், குழந்தையின் தாய்மாமா கோபிநாத்.
இதோ மாமா வந்து விட்டார்.. நிறைய தருவார் என்று அந்தப் பெண் கூறியது வீடியோவில் பதிவாகி உள்ளது.
தனக்கு தனியாகவும் வேறு பணியாளர்களுக்கு தனியாகவும் கொடுங்கள் என்று பணியாளர் கேட்டதற்கு, டிஸ்சார்ஜ் ஆகும் போது மொத்தமாக தருகிறேன் என்று வீடியோவில் கூறுகிறார் கோபிநாத். அதற்கு, இப்போதே தந்துவிடுமாறு கேட்டுள்ளார், அந்த பெண் பணியாளர்.
லஞ்சப் பணம் வந்தால் தான் தனக்கு சம்பளம் கிடைக்கும் என்று கூறும் பணியாளர், ஆயிரத்து 500 ரூபாய் தர வேண்டும் எனவும், அதில், 500 ரூபாய் மட்டுமே தன்னுடைய பங்கு என்கிறார்.
மருத்துவமனைக்கு வந்திருந்த மற்றொரு பெண்ணிடம் பேசிய போது, பணியாளர்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால், ஏதையாவது மாற்றி கொடுத்து விடுவார்கள் என்றும் பரிதாபத்தோடு கூறினார், அந்தப் பெண்.
தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு வருவோரிடம் கட்டாய வசூலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.