விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புதுச்சேரியைச் சேர்ந்த கூலிப்படையினர் 2 பேர் ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த அருண், கோர்காடு அன்பரசன் ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலைமுயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
அவற்றில் ஒரு வழக்கு தொடர்பாக மயிலம் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்களை செங்கமேடு பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் வழிமறித்து தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக இருவரும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய போதும் அவர்களை பின்தொடர்ந்துச் சென்று அந்த கும்பல் வெட்டிச் சாய்த்தது. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் அப்பகுதிக்குச் சென்று சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டார்.
இறந்த இருவரும் கூலிப்படையாகவும், ரவுடியாகவும் செயல்பட்டு வந்ததாகவும் அது தொடர்பான முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.