மீன்பிடி தொழில் செய்யும் தந்தை, மீன் விற்பனை செய்வதற்காக 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை, மகன் பரிசளித்துள்ளார். வாழ்வில் தான் உயர பாடுபட்ட தந்தைக்கு, காஸ்ட்லி கிஃப்ட் மூலம், மகன் நன்றி கடன் செலுத்தியிருப்பது பற்றி விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.......
மீன் வியாபாரியான தந்தைக்கு , சொகுசு கார் வாங்கிக் கொடுத்த மெரைன் இன்ஜினியர் சுரேஷ் கண்ணன் இவர் தான்....
இராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன் வயல் பகுதியை சேர்ந்த, சிவானந்தம்-காளியம்மாள் தம்பதியர், ஊருணி, கண்மாய்களில், குத்தகைக்கு மீன்பிடித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
தம்பதி சகிதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு, பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கியுள்ளனர். மெரைன் இன்ஜினியரிங் படித்து முடித்த சுரேஷ் கண்ணன், மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கப்பல் நிறுவனத்தில் மாதம் 2 லட்ச ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்...
தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, பெற்றோருக்கு புதிதாக வீடுகட்டிக்கொடுத்துள்ள சுரேஷ் கண்ணன், மீன்பிடி தொழிலை முற்றாக குறைத்துக் கொண்டு ஓய்வெடுக்குமாறு கூறிய நிலையில்,அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, உழைத்து தான் சாப்பிடுவோம் என விடாப்பிடியாக இருந்து விட்டதால், தந்தைக்கு இந்த சர்ப்ரைஸ் கிப்ட்டை கொடுத்து அசத்தியுள்ளார்.
கப்பலில் நல்ல சம்பளத்தில் பணியில் உள்ள சுரேஷ் கண்ணன், தனது தந்தை விருப்பபடி மீன்பிடி தொழிலுக்கும், மீன் விற்பனைக்கும் சென்று வரும் வகையில், 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள மாருதி சுசுகியின் நெக்சா XL 6 என்ற சொகுசு காரை பரிசளித்துள்ளார்.
என் மகன் வாங்கிக் கொடுத்த கார் என, ஊரில் உள்ளவர்களிடம் பெருமையாக கூறி வரும் சிவானந்தம்-காளியம்மாள் தம்பதி, மீன் வியாபாரத்திற்கும், இன்னும் பிற தேவைகளுக்கு, மகன் வாங்கிக் கொடுத்த காரில் பெருமையாக பயணித்து வருகின்றனர்......
தங்களை உழைப்பால் உயர்த்திய தந்தைக்கு, தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் மகன் கொடுத்திருக்கும் இந்த கார்... பரிசு அல்ல பொக்கிஷம்..!