படைக்கு பிந்தினாலும், பந்திக்கு முந்து என்பார்கள்.. அப்படி முந்திய பெண் வீட்டாரின் இலையில் பாயசம் ஊற்றப்படாததால் சீர்காழியில் பெரும் மோதலே உருவானது..! பாயசத்துக்காக சண்டையிட்டவர்களின் உரிமைப்போர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
யார்... யாரை அடிக்கிறார்கள் ? என்பதே தெரியாமல்... பாயசத்துக்காக ஆவேசமாக மோதிக்கொள்ளும் இவர்கள் தான் 300 பாயாச வீரர்கள்..!
சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பெண் வீட்டார் சாப்பிட பந்தியில் அமர்ந்துள்ளனர். அவர்களில் சிலருக்கு சாப்பிட்ட பின் இலையில் பாயாசம் வழங்கப்படவில்லை எனவும் சிலருக்கு வழங்கப்பட்ட பாயாசம் சரியில்லை என்றும் கூறப்படுகின்றது. பாயசத்துக்காக குரல் எழுப்பியவர்களின் வாயில் சிலர் சாம்பாரை தூக்கி ஊற்றியதால் உருவான சண்டை பெரும் மோதலாக மாறியது.
மண்டபத்திற்கு உள்ளே நாற்காலிகள் பறக்க, மண்டபத்துக்கு வெளியே வாசலில் இருதரப்பும் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து கிழித்து தாக்கி சண்டையிட்டுக் கொண்டனர்...
இந்த மோதலில் வீரப்பெண்மணி ஒருவர் தனது சேலையை தூக்கிச் சொருகிக் கொண்டு, தாக்குதலுக்காக கையை உயர்த்தி களமிறங்கிய நிலையில் தள்ளிவிடப்பட்டதால் தடுமாறி விழுந்தார்
இந்த பாயாச கலவரத்தில் தனது செருப்புகள் காணாமல் போய்விடக்கூடாது என்று இரண்டு செருப்புகளையும் பத்திரமாக கையில் எடுத்து வைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தினார்
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் போலீசில் சிக்காமல் தப்பிச்சென்றனர். இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட வீடியோவின் அடிப்படையில் இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.