திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கோவில்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் கொரோனா காலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வான மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்ற மதிப்பெண் சான்று வழங்க தலைமை ஆசிரியர் 500 ரூபாய் லஞ்சம் கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதிப்பெண் சான்று பெற வந்த மாணவர்களிடம், பிரசவ வார்டு ஆயா போல அநியாயத்துக்கு ஆத்திரப்படும் இவர் தான் அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரான ஸ்ரீதரனிடம், மாற்று சான்றிதழ் மற்றும் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெற 4 மாணவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்த 4 பேரும் கடந்த 2019- 2020-ம் கல்வி ஆண்டில் கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு முடித்துள்ளனர். கொரோனா காலம் என்பதால் அனைவரும் தேர்ச்சி என்று கல்வித்துறை அறிவித்து சான்றிதழ் வழங்கியிருந்தாலும், அவர்கள் முந்தைய தேர்வில் பெற்ற சராசரி மதிப்பெண் அடிப்படையில் பள்ளி நிர்வாகமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.
ஐடிஐயில் சேர்வதற்காக 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட 4 மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகிய போது, அனைத்து பாடங்களிலும் பாஸ் என்று மதிப்பெண் சான்று வழங்க தலா ரூ.500 வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஒவ்வொருவரும் ஏ4 சைஸ் பேப்பர் பண்டல் இரண்டு வாங்கி வருமாறும் கூறியுள்ளார். கையில் பணம் இல்லை எனக்கூறிய மாணவர்கள் ஒரே ஒரு ஏ4 சைஸ் பேப்பர் பண்டலை மட்டும் வாங்கி வந்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளனர்.
கோபமடைந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், மாணவர்களை எரும மாடுகள் என்றும் இவர்கள் ஐ.டி.ஐ.யும் படிக்க வேண்டாம், மண்ணாங்கட்டியும் படிக்க வேண்டாம் என்று எகிறி உள்ளார்.
பின்னர் மாணவர்கள் பணம் இல்லை டீச்சர் அதனால் தான் ஒன்று வாங்கி வந்தோம் என்று கெஞ்சி உள்ளனர். காசு இல்லனா 10,12,13 மார்க் போடட்டுமா? இவர்களுக்கு இது போதும் என மீண்டும் தலைமை ஆசிரியர் கூறுவதோடு போங்கடா என விரட்டுவதும் மாணவர்கள் காசு இல்லை என கெஞ்சுவதுமாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
சான்றிதழ் வழங்க தலைமை ஆசிரியர் லஞ்சம் கேட்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு