சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே காருக்குள் 7 வயது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக சிறுவனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரகிரி பைபாஸ் சாலையில், மாணிக்கம் என்பவர் கார் மெக்கானிக் பட்டறை நடத்தி வருகிறார். தனது சகோதரியின் திருமணத்திற்காக கடந்த 22-ம் தேதி பட்டறையை பூட்டி விட்டு சென்ற மாணிக்கம், நேற்று பட்டறையை திறந்துள்ளார்.
அப்போது பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் காரை திறந்து பார்த்தபோது, சிறுவனின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
அம்மாபேட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தது, அதே பகுதியை சேர்ந்த கட்டடத் தொழிலாளிகளான சுகன்யா, வினோத் தம்பதியின் மகன் சிலம்பரசன் என்பது தெரியவந்தது. சுகன்யாவிற்கு வினோத் மூன்றாவது கணவன் ஆவார்.
போலீசாரிடம் தனது மகன் உறவினர் வீட்டில் இருப்பதாக சுகன்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுவன் கொலை செய்யப்பட்டு காருக்குள் அடைத்து வைக்கப்பட்டானா அல்லது விளையாடும்போது காரில் நுழைந்தவன் வெளியே வர முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்தானா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.