ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் கால் வைக்க முடியாமல் தலை தெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அக்னி தீர்த்தக் கடலில் நீராடி ராமர் வழிபட்ட ஈஸ்வரரை வணங்கினால் பாவம் தீரும் என்பது நம்பிக்கை.
கோயிலுக்குள் செல்வோர் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவதால், அவர்களின் காலணிகள் அங்கேயே வாசல் அருகே பாதுகாக்கப்பட்டு வருகிறது. தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் முடிந்தவர்கள் தெற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேறுகிறார்கள்.
அவர்கள் தங்களது காலணிகளை எடுப்பதற்காக சுமார் 300 அடி தூரம் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்துச் சென்றாக வேண்டும். தற்போது கத்தரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மதிய நேரத்தில் வெளியே வருபவர்கள் ஒதுங்கக்கூட நிழலில்லாமல் ஓடிச் செல்வதும், கிடைக்கும் சிறிய நிழலில் சற்று இளைப்பாறுவதுமாக தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.
ஜோதிலிங்க தலம் என்பதால் கோயிலின் வெளிப்பகுதியின் 4 மாட வீதிகளிலும் வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், பக்தர்கள் நடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் கால் சூட்டினை பொறுத்துக் கொள்ள முடியாமல் நடைபாதையிலேயே அமர வேண்டிய நிலை உள்ளது.
கோயிலைச் சுற்றியும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் தெளிப்பது, தென்னைநார் தரை விரிப்புகளை நடைபாதையில் விரித்து அதன் மீது தண்ணீர் ஊற்றும் பழைய நடைமுறைகள் ஏன் கைவிடப்பட்டது என பக்தர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.