மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது தான் அரசின் குறிக்கோள் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில உறுப்பு கல்லூரிகளில் தமிழ்வழி பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டு இருப்பது அரசுக்கே தெரியாமல் பல்கலைகழகம் எடுத்த முடிவு என்றார். தகவல் அறிந்தவுடன் பல்கலை கழக துணை வேந்தரை தொடர்பு கொண்டு, இது தவறான முடிவு என்றும், தமிழ்வழி கல்வியை வளர்ப்பது தான் முதல்வரின் நோக்கம் என்று கூறியதாகவும், உடனே அந்த அறிவிப்பை துணை வேந்தர் திரும்ப பெற்றதாகவும் கூறினார்.
துணை வேந்தர்களை அறிவிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு இருந்திருந்தால், இதுபோன்று நடந்திருக்காது எனவும், துணை வேந்தர்களும் இனி தங்களை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.