கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் ஒப்பந்தம் எடுத்த அரசு ஒப்பந்ததாரர்கள் முறையாக கணக்கு காட்டவில்லை எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கரூர் ராமகிருஷ்ணா புரத்திலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தினர். ஆண்டான் கோயில் புதூரில் உள்ள கல்குவாரி உரிமையாளர் தங்கராஜ் என்பவரின் வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்டு இருந்ததால் அதிகாரிகள் சுவர் ஏறி உள்ளே சென்றனர்.
கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் இல்லம் மற்றும் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பொள்ளாச்சி அருகே உள்ள பணப்பட்டி கிராமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் நடத்தி வரும் கல்குவாரி மற்றும் எம்சாண்ட் யூனிட்டுகளிலும், காளியாபுரம் பகுதியில் உள்ள அரவிந்த் என்பவரின் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.