தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்துகொண்டு ஜப்பான் சென்றடைந்தார்.
சிங்கப்பூரில் அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து பேசிய முதலமைச்சரிடம் சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சண்முகம் கோரிக்கை விடுத்தார்.
அது பற்றி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாக தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்குமாறு முதலமைச்சர் அவருக்கு அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர் பயணத்தை முடித்து விமான நிலையம் சென்ற முதலமைச்சர், வழியில், தமிழர்கள் அதிகமாக வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்தினார்.
தொடர்ந்து விமானம் மூலம் ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.