திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கொக்கரக்கோ மது பாரை கலால் துறை அதிகாரிகள் இழுத்து பூட்டினர். ஒரு பீருக்கு 300 ரூபாய் வாங்கிக் கொண்டு சட்டம் பேசியவரின் பாருக்கு சட்டப்படி பூட்டு போடப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சந்திப்பில் கொக்கரக்கோ என்ற உணவகத்துடன் கூடிய மது பார் ஒன்று செயல்பட்டு வந்தது. ஒரு பீர் 300 ரூபாய்க்கு விற்றது தொடர்பாக திமுக பிரமுகர் ராஜ் என்பவர் தட்டிக் கேட்டு மனவேதனையுடன் ஆடியோ வெளியிட்டதால் சர்ச்சை உருவானது.
கொக்கரக்கோ பார் உரிமையாளர் சாமி நாதன், எல்லாம் சட்ட அனுமதியுடன் நடப்பதாக கூறிய நிலையில் இது தொடர்பான செய்தி வெளியானது. கொக்கரக்கோ என்ற பெயரில் எந்த ஒரு பாருக்கும் அனுமதியளிக்காத நிலையில் கலால் துறை துணை ஆணையர் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்
மனமகிழ் மன்றம் பெயரில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி பெற்றதும், அந்த அனுமதியும் கடந்த 2019 ஆம் ஆண்டே காலாவதியானதும் தெரியவந்தது.
இதையடுத்து கொக்கரக்கோ மது பாருக்கு 90 நாட்கள் செயல்பட தடை விதித்து இழுத்துப்பூட்டினர்
கடந்த 4 வருடமாக அனுமதி பெறாமல் முக்கிய சாலையில் இரு மடங்கு விலைக்கு மது பானம் விற்று வந்த கொக்கரக்கோ பார் இழுத்து மூடப்பட்டதை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தினார்.
தமிழகத்தில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் அனுமதி பெற்று இன்னும் பல ஊர்களில் பார்கள் செயல்பட்டு வருவதாக மதுப்பிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.