பத்தாம் வகுப்பு தேர்வில் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால், விடாமுயற்சியுடன் படித்து மாவட்டத்தின் முதல் இடத்தை எட்டிப்பிடித்த மாணவர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
திருநெல்வேலி சந்திப்பில் மகாகவி பாரதியார் பயின்ற 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவன் அர்ஜுன பிரபாகரன் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சிறுவயதில் தந்தையை இழந்து, தாய் கூலிவேலை செய்துவரும் நிலையில் மாணவனுக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்களே பள்ளிக்கான கல்வி கட்டணத்தை செலுத்தி வந்தது குறிப்பிடதக்கது.
சேலம் மாவட்டம் மேச்சேரி கைகட்டி வெள்ளாரியில் உள்ள சோனா சன் ஹைடெக் பள்ளி மாணவி யோகனா பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார்.
திருவாரூர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுப வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீநிதி 10 ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். தந்தையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவியை ஆசிரியர்கள் பாராட்டினர்
ஊக்குவிக்க நல்ல ஆசிரியர்களும், கை கொடுக்க பெற்றோரும், கூடவே விடாமுயற்சியும் இருந்தால் தேர்வுகள் மாணவர்களின் சாதனைக்களமாகும்..!