தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஒப்பந்தப் பணியாளராக இருந்து, பணி நிரந்தரம் அடைந்த ஊழியரின் அரியர் தொகையை வழங்குவதற்காக, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர், தலையை வைத்து முட்டி அழுது கையெடுத்து கும்பிட்ட கூத்து அரங்கேறி உள்ளது.
தரையில் படுத்து... கையெடுத்து கும்பிட்டு.. தலைகுணிந்து... மேஜையில் தலையை முட்டி... கண்ணீர் வடிக்கும் இவர் தான் கடமையை செய்ய கையை நீட்டி லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்ட அரசு அதிகாரி சீனிவாசன்..!
தென்காசி மாவட்டம், குற்றாலம் , குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக உள்ள ராமசுப்பிரமணியன் 15 வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்த பணியாளராக இருந்து வந்தார். தற்போது பணி நிரந்தரம் பெற்றுள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய போது இவருக்கு வழங்க வேண்டிய அரியர் தொகையான 3 லட்சத்து, 93 ஆயிரத்து 700 ரூபாயை வழங்குவதற்காக, குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கண்காணிப்பாளரான சீனிவாசன் என்பவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
ராமசுப்பிரமணியன் தன்னிடம் பணம் இல்லை எனவும், தன்னுடைய குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளதால் தனக்கு சேரவேண்டிய தொகையை மீட்டு தந்தால் பெரும் உதவியாக இருக்கும் என ஸ்ரீனிவாசனிடம் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுத்தால் மட்டுமே, அரியர் பணம் உனக்கு கிடைக்கும் என பல நாட்களாக அதிகார தோரணையில் அலைக்கழித்துள்ளார்.
தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இது தொடர்பாக ராமசுப்பிரமணியன் புகார் அளித்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ராமசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை ஸ்ரீனிவாசனிடம் கொடுத்துள்ளார். ஆசையாய் வாங்கி மேஜையில் வைத்த சீனிவாசனை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி மதியழகன் தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்ததும், பொறியில் சிக்கிய எலியாக பதறிப்போனார் சீனிவாசன்
தெரியாமல் தான் பணம் வாங்கிவிட்டதாக கூறி அழுது கண்ணீர் விட்டு கதறி கையெடுத்துக் கும்பிட்டார். இதனை நீதிபதியிடம் வந்து சொல்லுங்கள் என்று போலீசார் அவரை கைது செய்து அழைத்துச்சென்றனர்
இதே போல அனைத்து பகுதி லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டால் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அடாவடி அதிகாரிகள் கொஞ்சமாவது அடங்குவர் என்கின்றனர் மக்கள்.