பெங்களூரை சேர்ந்த 60 வயது பெண்மணியிடம் முகநூல் மூலம் பழகி நெருக்கமான கன்னியாகுமரியை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் அந்த பெண்மணியின் படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த நிலையில், தொடர்ந்து பிளாக்மெயில் செய்ததால் போலீசில் சிக்கி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளையை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரான அருள் என்பவர் தான், முக நூல் மூலம் அம்மணி வேட்டை நடத்தி சிக்கி இருப்பவர்.
ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் முக நூலில் மூழ்கிக்கிடந்த இளைஞர் அருளுக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஷபிதா நாயக் என்ற 60-வயதான பெண்மணியுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவருக்கொருவர் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்ட நிலையில் அருள், பெங்களூரு சென்று அந்த பெண்மணியை சந்தித்து வரும் அளவுக்கு நட்பு இறுக்கமாகி உள்ளது.
இந்த நிலையில் அந்த பெண்மணியிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு முதலில் 12 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் பெற்ற அருள் அதனை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார். அந்தப்பணத்தை திருப்பிக் கேட்ட போது அந்தப்பெண்ணின் செல்போனுக்கு, அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்த அருள், தனக்கு அவசரமாக 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டும்., இல்லையென்றால் இந்த மார்பிங் படங்களை கணவருக்கு அனுப்பிவிடுவேன் என்று பிளாக் மெயில் செய்துள்ளார்.
இந்த வயதில், சின்னபசங்களை நம்பி பழகியதால் இப்படி ஒரு விபரீதத்தில் சிக்கிக் கொண்டோமே என்று கலக்கமடைந்த அந்த பெண்மணி , தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தன்னை தமிழகத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் பிளாக் மெயில் செய்து பணம் கேட்டு மிரட்டிவரும் சம்பவத்தை விவரித்துள்ளார்.
இதற்கிடையே கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டி வந்த இளைஞர் அருளை தேடி கன்னியாகுமரி நெய்யூரில் உள்ள அவரது வீட்டுகே சென்ற, பெங்களூரு புத்தூர் காவல்நிலைய போலீசார் அவரை கைது செய்து அழைத்துச்சென்றனர். அருள் மீது பெண்மைக்கு களங்கம் விளைவித்து பெண்ணை மிரட்டி பணம் பறித்தது உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.