எக்கியார்குப்பம் சம்பவத்தைத் தொடர்ந்து கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தவும் குறிப்பாக வனப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
டிஜிபி உத்தரவை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்வோரையும், புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வருவோரையும் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய 7 உட்கோட்டங்களிலும் அந்தந்த உதவி, துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 226 லிட்டர் சாராயம், 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய கள்ளச்சாராய சோதனையைத் தீவிரப்படுத்தினர். இதில் முறைகேடாக மது விற்றது, வெளிமாநில மதுவை கடத்தி வந்தது என 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் வயல் பகுதியில் ஊறல் வைத்து சாராயம் தயார் செய்வது தெரியவந்ததை அடுத்து, அங்கு சென்ற போலீசார், இருவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்தும் நடந்த தீவிர சோதனையில் வெளிமாநில சாராயத்தை வாங்கி வந்து விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 44 பேரை கைது செய்தனர்.