மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் விவசாயி தலையில் மண் வெட்டியால் தாக்கிய கும்பல், அவர் கீழே விழுந்ததும் டிராக்டரை ஏற்றிக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்தது விபத்து என போலீசாரும் கொலை என உறவினரும் கூறுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி அடுத்த பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் என்பரிடம் 40 ஆயிரம் ரூபாய்க்கு ராஜேந்திரன் விலை பேசியுள்ளார்.
அங்கு கடந்த சில நாட்களாக மண் எடுக்கப்பட்டு வரும் நிலையில், செவ்வாய்கிழமை மாலை மண் எடுக்கும் பகுதிக்குச் சென்ற ராஜேந்திரன் வெகுநேரமாக வீடு திரும்பாததால், உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர். அங்கு உடல் நசுங்கிய நிலையில், ராஜேந்திரன் இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
விசாரணை மேற்கொண்ட போலீசார், மண் எடுக்க வந்தவர்களிடம் முழு தொகையைக் கேட்டு ராஜேந்திரன் வாக்குவாதம் செய்ததாகவும் மண் எடுக்கவிடாமல் தடுக்க டிராக்டரின் சாவியைப் பிடுங்கச் சென்றபோது, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும் கூறினர்.
ஆனால் பாஸ்கரனின் ஆட்கள் ராஜேந்திரனின் தலையில் மண் வெட்டியால் தாக்கியுள்ளனர் என்றும் அதில் அவர் சுயநினைவிழந்து கீழே விழுந்துள்ளார் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். நடந்த சம்பவம் குறித்து பாஸ்கரனிடம் போனில் தெரிவிக்கவே, அவரது யோசனைப் படி ராஜேந்திரன் மீது டிராக்டரை ஏற்றிக் கொன்றுவிட்டு விபத்து போல் நாடகமாடுகின்றனர் எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் இறங்க முயன்றதை அடுத்து, டிராக்டர் உரிமையாளரும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருமான பாஸ்கரனையும் டிராக்டர் ஓட்டுநர் பாலு என்பவரையும் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.