தமிழகம் முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சென்னையில் மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் சென்று தேர்வு எழுதினர். ஆடை, அணிகலன் கட்டுப்பாடுகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்ட நிலையில், மாணவர் ஒருவர் அணிந்து வந்திருந்த மோதிரத்தை போராடி கழற்றிய பின்னரே அவரை தேர்வறைக்குள் அனுமதித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நீட் தேர்வு மையத்துக்கு தாமதமாகச் சென்ற மாணவி உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், அவருக்கு ஆதரவாக மற்ற மாணவர்களின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் கெஞ்சியும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பூபேஷ் என்ற மாணவருக்கு கும்பகோணத்திலுள்ள தாமரை இண்ட்டர்நேஷனல் என்ற பள்ளியில் தேர்வு மையம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அதே பெயரில் தஞ்சையில் இருக்கும் மற்றொரு பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவரை தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில், பைக்கில் முக்கால் மணி நேரத்தில் அதிவேகமாக கும்பகோணம் சென்றுள்ளார். ஆனால் நேரம் முடிந்துவிட்டது என அங்கும் அனுமதிக்காததால், நொந்துபோய் திரும்பிச் சென்றார். ஹால் டிக்கெட்டில் பள்ளியின் முகவரி சரியாக குறிப்பிடாததே இந்த குழப்பத்துக்குக் காரணம் என அவர் கூறினார்.
நெல்லையில் தேர்வு மையத்துக்கு கடைசி நேரத்தில் அரக்கப் பரக்க ஓடி வந்த மாணவர்களை ஆசுவாசப்படுத்தி போலீசார் உள்ளே அனுமதித்தனர். மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த ஆபரணங்களை அகற்றிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
தேனியில் தேர்வு மையத்துக்கு ஜீன்ஸ் பேண்ட், முழுக்கை சட்டையுடன் அணிந்து வந்த மாணவர்கள் மாற்று உடை அணிந்த பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மாணவிகளின் ஆடையில் இருந்த கூடுதல் பொத்தான்களை பெண் ஆசிரியர்கள் அகற்றினர்.