சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பச்சைப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
அழகர்கோவிலில் இருந்து மதுரை வந்த கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை வந்தடைந்தார். விடிய, விடிய அழகருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற்றன.
இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் வைகையாற்றில் பவனி வந்தார்.
ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீரராகவ பெருமாள் வரவேற்றார்.
கோவிந்தா... கோவிந்தா கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கருப்பண்ண சாமி வேடமிட்டும் பக்தர்கள் அழகரை வரவேற்றனர். ஆற்றில் தாமரை மலர்களால் நிரப்பப்பட்டிருக்கும் பகுதியில் அதிகாலை 5.50 மணியளவில் கள்ளழகர் எழுந்தருளினார்.
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வுக்காக 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.